5

இனியவை நாற்பது

கடவுள் வாழ்த்து

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

(பதவுரை) கண் மூன்று உடையான்- மூன்று கண்களையுடைய சிவபெருமானது, தாள் - திருவடிகளை, சேர்தல் - அடைதல் கடிது இனிது - மிக வினிது ; தொல் - பழைமையாகிய, மாண் - மாட்சிமை பெற்ற, துழாய் மாலையானை- திருத்துழாய் மாலையை யணிந்த திருமாலை, தொழல் - கைத்தொழுதல், இனிது -; முகம் நான்கு உடை யானை - நான்கு முகங்களையுடைய பிரமதேவனை, சென்று (அவன் திருமுன்) சென்று, அமர்ந்து - மேவியிருந்து, பேணி ஏத்தல் - விரும்பி வாழ்த்தல், முந்துற இனிது - முற்படவினிது.

கண்மூன்றாவன சோம சூரி யாக்கினி . சேர்தல்-இடைவிடாது நினைத்தல்.

"மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் "

(குறள் - 3)

என்னும் பாவிற்குப் பரிமேலழகர் கண்ட உரையானஃதுணர்க; இனி, ‘தஞ்சமாகக் கொண்டடைதல்' எனினுமாம். கடிது - ‘கடி' என்னும் உரிச்சொற் றிரிபென்க. ‘முந்துற' வென்பது ‘இனிது' என்னுங் குறிப்புவினையொடு முடிந்தது. ‘பேணிமுந்துற' வென முடித்து , ‘(அவன்) மற்றெல்லா வுயிரினும் (தன்னை) விரும்பி முன்வர' எனவும் ; ‘ முந்துறப் பேணி ' என முடித்து, (ஏத்துவார்)முன்வர விரும்புகின்றவனாகிய அல்லது (ஏத்துவாரை) ‘முற்படப் பாதுகாப்பவனாகிய' (பேணி ஈண்டுப் பெயர்) எனவும் ‘முந்துசென்று