"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙன மாளு மருள் " (குறள் - 251) என்றபடி, தன்னூன் வளர்த்தல் கருதிப் பிறிதோருயிரின் தசையைத் தின்பவன் அருளிலனாய் அவ்வுலகத்தை இழத்தலின், ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே' எனவும், "மானயா நோக்கியர் மருங்கல் போல்வதோர் கானயாற் றடைகரைத் கதிர்கண் போழ்கலாத் தேனயாம் பூம்பொழிற் றிண்ணை வெண்மணல் " (கனகமாலையார் - 266) எனச் சிந்தாமணியுடையார் உரைத்தவாறு, நுடக்கமும் அழகுமுடைய கான்யாற்று நீரடைகரை பொழில் செறிந்து வெண்மணல் பரந்திருத்தலின் வாழ்தற்கு வசதியுண்மை தோன்றக் ‘கான்யாற்றடை கரை யூரினிது' எனவும், தம் நிலையிற் றாழாமையுந் தெய்வத்தாற் றாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாகியமானமுடையார் கொள்கை, "இம்மையு நன்றா மியனெறியுங் கைவிடா தும்மையு நல்ல பயத்தலாற் - செம்மையி னானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண் மான முடையார் மதிப்பு " என்று நாலடியாரிற் கூறிவண்ணம் இருமையும் பயத்தலின் ‘ மானமுடையார் மதிப்பு இனிதே' எனவுங்கூறினா ரென்க. காண்டல் - செய்தல் ; ‘நகரங் கண்டான் ' என்னும் வழக்குண்மை தெரிக. இனி , ‘காண்டல்'‘பார்த்தல் 'என்பாருமுளர். பின்னர் நிற்கும் ‘ஊன்' கருவியாகுபெய ரென்க. (5) 5. கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ் செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல் எய்துந் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும் பொல்லாங் குரையாமை நன்கு. (ப-ரை.) கொல்லாமை - (ஓருயிரைக்) கொல்லாமை, முன் இனிது - மிக வினிது ; கோல் கோடி - (அரசன்) நடுவு நிலைமை தவறி, மாராயம் செய்யாமை (தன்கண் வினை செய்வார்க்குச்) சிறப்புச் செய்யாமை முன் இனிது - மிக வினிது, செங்கோலன் ஆகுதல்.
|