துன்பந்) தன்பால் வந்து சேர்ந்து , வெய்து உறும் போழ்தும் - (தான் தாபமடையுங் காலத்தும், மனன் அஞ்சான் ஆகல் - மனம் அஞ்சாது நிற்றல், இனிது-. தளர் நடையைக் குறுகுறு நடத்தல் என்ப. "குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே " (புறம் - 188) என்றார் ஒரு புலவர். ‘அமிழ்தின்' என்புழிச் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. ‘இன்' உறழ் பொருளின் வந்தது; ஒப்புப் பொருளின் வந்ததெனினு மமையும். தீவினைப் பயன் நுகர்ந்தே தீரவேண்டுதலின், ‘மனனஞ்சானாக லினிது' என்றார். ‘வெய்துறும்' ஒருசொல் லெனினுமாம். 15. பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை மதமுழக்கங் கேட்டல் இனிது. (ப-ரை.) பிறன் மனை - பிறனுடைய மனைவியை, பின் நோக்கா - திரும்பிப் பாராத, பீடு - பெருமை, இனிது -; வறன் - நீரின்மை யால், உழக்கும் - வருந்தும், பைங்கூழ்க்கு பசிய - பயிர்க்கு, வான்சோர்வு - மழை பொழிதல், ஆற்ற இனிது - மிக இனிது ; மறம் மன்னர் - வீரத்தையுடைய அரசர், கடையுள் - கடைவாயிலின்கண், மாமலை போல்யானை - பெரிய மலைபோலும் யானைகளது, மதம் முழக்கம் - மதத்தாற் செய்யும் பிளிற்றொலியை, கேட்டல் -,இனிது-. ‘பிறன் மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா' என்றார் பிறரும். பின்நோக்குதல் - திரும்பிப் பார்த்த வண்ணம் நடத்தல் ; இதுகாதலின் நிகழ்வது என்பதனை, "எருத்தத் திரண்டுவிழிபடை யாமையென் னாருயிரை வருத்தத் திருத்த முகம்பிறக் கிட்டு மயினடக்குந் திருத்தத்தைக் கண்டு விளர்த்த வென் னாதய னூர்தி செங்கோல் பொருத்தத்த னூர்தியும் பண்டே விளர்த்துப்புகழ்கொண்டவே" (தணிகைப் புராணம் , களவு - 81)
|