22

19. நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனிஇனிதே
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்இனிதே
முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது
தக்குழி ஈதல் இனிது.

(ப-ரை.) நட்டார் - (தன்னிடம்) நட்புக்கொண்டாரை, புறங்கூறான்- புறங்கூறாதவனாய், வாழ்தல் - வாழ்வது, நனி இனிது - மிகவினிது; பட்டாங்கு - சத்தியத்தை, பேணி பாதுகாத்து, பணிந்து ஒழுகல் - (யாவர்க்கும்) அடங்கி நடத்தல், முன் இனிது - முற்பட வினிது, முட்டு இல் - குறையில்லாத, பெரும் பொருள் - பெரும் பொருளை, ஆக்கியக்கால் - தேடினால், அது அப்பொருளை, தக்க உழி - தக்க பாத்திரத்தில், ஈதல் - கொடுத்தல்,இனிது-.

புறங்கூறலாவது காணாவிடத்துப் பிறரைஇகழ்ந்துரைத்தல் ; ‘தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா வவற்கு ' என்றர் நாலடியாரினும், ‘பொய்யா விளங்கே விளக்கு' ஆகலின் ‘பட்டாங்கு பேணி' எனவும், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்' ஆகலின் ‘பணிந்தொழுகல்' எனவும்,

"உறக்குந் துணையதோ ராலம்வித்தீண்டி
யிறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனுந்
தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்"

(நாலடி - 38)

ஆதலின் ‘தக்குழி யீதல் ' எனவுங் கூறினார்.

புறங்கூறான் : முற்றெச்சம் . மற்று : அசை. ‘தக்குழி என்புழி,அகரந் தொக்கது,

20. சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது.

(ப-ரை.) சலவரை - வஞ்சகரை , சாரா விடுதல் - அடையாது நீக்குதல், இனிது-; புலவர்தம் - அறிவுடையாருடைய வாய்மொழி - வாய்ச் சொற்களை, போற்றல் - பாதுகாத்துக் கோடல், இனிது-; மலர்தலை - அகன்ற இடத்தையுடைய ஞாலத்து - பூமியில் வாழ்கின்ற , மன் உயிர்க்கு எல்லாம் - நிலை பெற்ற எல்லாவுயிர்க்கும், தகுதியால் - உரிமைப்பட, வாழ்தல் வாழ்வது, இனிது.