22. வருவா யறிந்து வழங்கல் இனிதே ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்தல் இனிது. (ப-ரை.) வருவாய் - (தமக்குப்) பொருள் வருகின்ற நெறியினள வினை, அறிந்து-, வழங்கல் - கொடுத்தல், இனிது-; ஒருவர் பங்கு ஆகாத - ஒருவர்க்குச் சார்பாகாத ஊக்கம் - மனவெழுச்சி , இனிது-; பெருவகைத்து ஆயினும்- பெரிய பயனையுடைத்தாயினும், பெட்டவை - தாம் விரும்பியவற்றை , செய்யார் - ஆராயாது செய்யாதவராய், திரிபின்றி - தம்மியல்பின் வேறுபடுதலில்லாது, வாழ்தல் - வாழ்வது,இனிது-. வருவாய் : ஆகுபெயர். பிறரும், ‘ஆற்றி னளவறிந் தீக' எனவும், ‘வருவாயுட் கால்வழங்கி வாழ்தல்' எனவும், ‘வந்த பொருளின் காற்கூறு வருமே லிடர்நீக் குதற்கமைந்து, மைந்த விருகானினக் காக்கி மற்றைக் காலே வழங்கிடுக' எனவுங் கூறினர். தொடர்புடையார்க்குச் சார்பாக மனஞ் செல்லுதல் இயல்பாகலின், ‘ஒருவர் பங்காகாதவூக்க மினிதே' என்றார். ‘தொழிற் பயன் பெரியதாயினும் அதனை நோக்காது' தன்மனத்தின்கட்டோன்றும் விருப்பினை யடக்கித் தம்மியல்பின் நிற்றல்வேண்டுமென்பார், ‘பெட்டவை செய்யார், திரிபின்றி வாழ்தலினிது என்றார். தம் இயல்பாவது தமக்கும் பிறர்க்கும்நல்லன செய்தல். 23. காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச் சூதரைச் சோர்தல் இனிது. (ப-ரை.) காவோடு - சோலை வளர்த்தலோடு, அறக்குளம் தருமத்திற்குக் குளத்தை, தொட்டல் - வெட்டுதல் மிக இனிது-; அந்தணர்க்கு - மறையவர்க்கு, ஆவோடு - பசுவோடு, பொன் ஈதல் - பொன்னைக் கொடுத்தல், முன் இனிது - மிகவினிது ; பாவமும் அஞ்சாராய் - (இம்மையிற் பழிக்கேயன்றி மறுமையிற்) பாவத்திற்கும் அஞ்சாதவராய், பற்றும் - (அப் பாவத்தைப்) பற்றுகின்ற, தொழில் - தொழிலையும், மொழி - சொல்லையுமுடைய, சூதரை - சூதாடிகளை, சோர்தல் - நீக்கல்,இனிது. "காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால் வேதங் கரைகண்ட பார்ப்பானுந் - தீதிகந்து ஒல்வது பாத்துண்ணும் ஒருவனும் இம்மூவர் செல்வர் எனப்படு வார்" (திரிகடுகம் - 70)
|