"காவலர்த்துங் குளந்தொட்டுங் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கும் வளம்பெருக நல்கியும்நா னிலத்துள்ளோர் யாவருக்குந் தவிராது ஈகைவினைத் துறைநின்றார்" (பெரியபுராணம் ; திருநாவுக்கரசு - 36) எனவும் ஆன்றோர் பிறருங் கூறினார். ஆவோடு பொன்னீதல் - கோதாந ஸுவர்ந தானங்கள் பற்றுந் தொழின் மொழியாவன பொய்த்தொழிலும் பொய்ம் மொழியுமாம். ‘பழிபாவங்கட்கஞ்சாத சூதரொடு சேரற்க'வென்பது கருத்தென்றுணர்க. "ஐயநீ ஆடுதற்கு அமைந்த சூதுமற்று எய்துநல் குரவினுக்கு இயைந்த தூதுவெம் பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்றதாய் மெய்யினுக்கு உறுபகை யென்பர் மேலையோர்" (நைட. சூதாடு.21) என்றிருத்தல் காண்க. 24. வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே இல்லது காமுற் றிரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது. (ப-ரை.) வெல்வது - மேம்படுதலை, வேண்டி - விரும்பி, வெகுளாதான் - கோபியாதவனது, நோன்பு - தவம், இனிது-; ஒல்லும் துணையும் - கூடியவளவும் ஒன்று உய்ப்பான் - எடுத்துக்கொண்டதொரு கருமத்தை நடத்துவோனது, பொறை - ஆற்றல் , இனிது-; இல்லது - (தம்மிடத்து) இல்லாததொரு பொருளை, காமுற்று - விரும்பி , இரங்கி - (அது பெறாமையின்) மனம் ஏங்கி, இடர்ப்படார் - துன்பப்படாதவராய், செய்வது - (உள்ளது கொண்டு) செய்யத் தக்கதொரு கருமத்தை, செய்தல் செய்வது,இனிது-. மேம்படுதாவது மேற்கொண்ட தவத்தை இடையூறு புகாது காத்து இனிது முடித்தல்.‘வெல்வது வேண்டி வெகுளிவிடல் என்றார். ஆற்றலாவது இடுக்கண் முதலியவற்றாற்றளராமை. "பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளுஞ் சிற்றுயிர்க் காக்க மரிதம்மா" (நீதிநெறி விளக்கம் - 94)
|