"நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற னிலையுளே னவைதுரந் திடுமுன் வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி வந்தனன் நின்குறிப் பறியேன்" (சோணசைல - 3) என்பதனானுங் கண்டு கொள்க. மிக்க பேராசை நிரம்பும் வரையிற் பேரிடரும் ; நிரம்பாதாயிற் பேரிடரும் நிரம்பினும் முடிவிற் பேரிடரும்விளைத்தலின் அதனைக் கருத்துட்கொண்டு. "சிறப்பீனுஞ் செல்வமும் ஈனும் அறத்தினூஉங் காக்க மெவனோ உயிர்க்கு " (குறள் - 31) என்றபடி இம்மையினும் மறுமையினும் இன்பம் பெரிதுந்தந்து அந்தமிலின்பத் தழிவில் வீட்டையுந் தரும் அறத்தைக் கைவிடுதலடா தென்பர் , ‘உற்ற பேராசை கருதி யறனொரூஉ மொற்கமிலாமை யினிது என்றார். ‘ஒரூஉம் 'என்பது காரியத்தின்கண் வந்த பெயரெச்சம். 40. பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே வித்துக்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினியது இல். (ப-ரை.) பத்துக் கொடுத்தும் - பத்துப்பொருள் கொடுத்தாயினும், பதி இருந்து - உள்ளூரிலிருந்து, வாழ்வு - வாழ்தல் ,இனிது-; வித்து - விதைக் கெனவைத்த தானியத்தை, குற்று உண்ணா - குற்றியுண்ணாத, விழுப்பம் - சீர்மை, மிகவினிது -, பற்பல நாளும் - பற்பல நாட்களும், பழுது இன்றி - பழுது படாது, பாங்கு உடைய - நன்மையுடைய நூல்களை, கற்றலின் - கற்பதைப் போல, காழ் இனியது- மிக வினியது, இல் (வேறொரு செய்கை)இல்லை. ‘சில' என்னும் பொருளிற் ‘பத்து' என்னும் சொல்லை வழங்குதலுண்மையை, ‘பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடி' (தேவாரம்) ‘ எண்ணிப்பத் தங்கை யிட்டா லிந்திரன் மகளுமாங்கே' (சிந்தாமணி, கனகமாலை - 41)என்பவற்றான்றிக. ‘பத்து' என்பதற்குப் ‘பத்துப் பொருள்' என்றுரை வகுத்தார் நச்சினார்க்கினியர்.
|