"அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி" (குறள் - 506) என்றிருத்தல் காண்க. இதற்குச் ‘சுற்றமுடையார் படையை ஆளுந்தன்மை மிகவினிது' எனப் பொருளுரைப்பாரு முளர். "ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப் பேதையிற் பேதையா ரில்" (குறள் - 834) என்றிருத்தலின் தந்தையாயினும் மனமொழி மெய்களினடங்கானாயின், அவன்பால் உபதேச மொழிகளைக் கேட்டு அவற்றின் வழியொழுகாமை இனி தென்றார். இதற்குத் தந்தையே யானாலும் அவன் அடங்காதவனானால் அவனை உடன் கொண்டு ஓரிடத்தை அடையாதவனாகுதல் இனிது என் றுரை பகர்வாருமுளர். ஏல் : ‘எனின்' என்பதன் மரூஉ. 8. ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக் கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது. (ப-ரை.) ஊரும் கலிமா - (தான் ஏறிச்) செலுத்துகின்ற போருக்கு உரிய குதிரை, உரனுடைமை - வலிமையுடையதாயிருத்தல், முன் இனிது - மிக வினிது ; தார்புனை மன்னர் தமக்கு - மாலையணிந்த அரசர்களுக்கு உற்ற வெஞ்சமத்து - போர் வாய்த்த களத்தில் , கார் வரை யானை - கரிய மலை போன்ற யானைகளின், கதம் - வெகுண்டு செய்யும் போரை, காண்டல் - காணுதல், முன் இனிது -; ஆற்றவும் ஆர்வம் உடையவர் - மிகவும் அன்புடையார், நல்லவை - நல்ல கேள்விகளை , பேது உறார் - மயக்கமடையாதவர்களாய், கேட்டல் - கேட்பது ;இனிது-. அரசன் ஏறிச் செல்லுங் குதிரைக்குப்பசி தாகம் பொறுத்தற்கும் வேண்டியபோது விரைந்தோடுதற்கும்நெடிது நேரஞ்சாரி செல்வதற்கும் வலிமை வேண்டுதலின், ‘ஊருங் கலிமா வுரனுடைமை முன்னினிதே' என்றார். தார் அடையாள மாலை; ‘கண்ணியுந் தாருமெண்ணின ராண்டே' என்னுந் தொல்காப்பயிச்சூத்திர வுரை காண்க. "குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்பவான் வினை " (குறள் - 758) என்றவாறு யானைப்போர் காண்டற்குத் தக்க காட்சியாதலுணர்க. ‘ஆற்றவும் ஆர்வமுடையார் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது'
|