16

மன மாண்பிலாதவார் - கெட்ட எண்ணமுடையார்; துட்டர்கள். ‘துட்டரைக் கண்டாற் றூரநில்' என்னும் பழமொழி காண்க. ‘எனை, மாண்பு' என்புழி இன்னும் உம்மையும் செய்யுள் விகாரத்தாற்றொக்கன.

11. அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்
பெருமைபோற் பீடுடையது இல்.

(ப-ரை.)அதர் சென்று - வழிபோய், வாழாமை - வாழாதிருத்தல், ஆற்ற இனிது - மிகவினிது; குதர் சென்று - தப்பு வழியிற் சென்று, கொள்ளாத (நூற்குப் பொருள்) கொள்ளாத கூர்மை - மதிநுட்பம் , இனிது-; உயிர் சென்று படினும் - (பசியான்) உயிர் இறந்துபடினும், உண்ணாதார் கைத்து - உண்ணத்தகாதார் கையிலுணவை, உண்ணா - உண்ணாத, பெருமைபோல் - பெருமைபோல ‘பீடு உடையது இல் - பெருமையுடையது (பிறிதொன்று) இல்லை.

அதர் செல்லலாவது,

"பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்"(தேவாரம்)

என்றபடி ஊரூராய்ச் சென்றிரத்தல். அன்றி , நாடோடியாத லெனினும் வழிபறித்த லெனினுமாம். இவற்றுள் வழிபறித்தல் வேடர்க்குக் குலத்தொழிலாகலின் ஏனையோருள் அத் தொழிலின் முயல்வார் சிற்சிலரையே நோக்கிக் கூறியதாமாகலின், அப் பொருள் சிறவாதென்க. நூற்பொருளை நுனித்தறியாது வலிந்தும் நலிந்துந் தங்கருத்திற் கியைந்தவாறு கொள்பவார் பலராகலின், ‘குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே ' என்றார். உண்ணாரெனப்படுவார் தாழ்ந்த வருணத்தோர்.

"தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க"

என்னும் நாலடியினை ஈண்டறிக.

இனி, ‘உண்ணிருண் ணீரென் றுபசரியார் தம் மனையி 'லுண்ணாமை கோடி யுறும் ' என்றிருத்தலின், ‘ஈண்டு உண்ணார் அன்போடுபசரியாதார் ' என்பாருமுளர். அன்றியும், ‘உண்ணார் என்றது குரு, தெய்வம் , வறிய ராதியரை; அவர் பொருள்கொண்டு உண்ணுதல் பெரும்பாவமாகலின் என்பாரு