21. இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த் தொல்வலி யாற்றித்1 துளங்கினவாய் மெல்ல நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட் சினமால் பொருத களத்து. (ப-ரை.) சினம்- கோபத்தையுடை, செங்கண்மால் செங்கட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில், இணைவேல் - இணைத்த வேல்கள், எழில் மருமத்து - அழகிய மார்வில், இங்க - அழுந்துதலால், புண்கூர்ந்து - புண்மிகுத்து, கணை அலைக்கு - அம்பின் அலைப்புகளால், ஒல்கிய யானை தளர்ந்த யானைகள், துணை இலவாய் - (தம்மேற்கொண்ட) துணைவரையிலவாய், தொல் வலி - பண்டை வலியினின்று, ஆற்றி - நீங்கி, துளங்கின ஆய் - நடுங்கி, மெல்ல -மெல்ல, நிலம் - நிலத்தை, கால் கவரும் - காலாலே அகப்படுக்கும், மலைபோன்ற - மலையை யொத்தன எ - று. இங்கல் - அழுந்தல், அலை:முதனிலைத் தொழிற் பெயர். அலைக்கு: வேற்றுமை மயக்கம் (21) 22. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை கோடுகொ ளொண்மதியை நக்கும்பாம் பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து (ப-ரை.) பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி-இடி போன்ற, முரசின்-முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர் நாடன்- காவிரி நாட்டை யுடையவனாகிய செங்கட்சோழன், கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஒளிறு வாள் - விளங்கும் வாளையேந்திய, ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், வரி நுதல் - வரி பொருந்திய நெற்றியையுடைய, ஆடு இயல் - வெற்றி சேர்ந்த, யானை தடகை - யானையின் நீண்டகைகளை, துணிப்ப துண்டுபடுத்த, துணிந்தவை - துண்டிக்கப்பட்ட அவை, இருநிலம் சேர்ந்த - பெரிய நிலத்தில் விழுந்து கிடக்கும், குடைகீழ்-குடைகளின் அருகே (கிடப்பன).
1 . 'தொல்வலியிற்றீர' என்பதுவே சிறந்த பாடம்.
|