36. ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. (ப-ரை.) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கழுமலம் - கழுமலமென்னும் ஊரினை, கொண்ட நாள் - கைக்கொண்ட நாளில், புனல் நாடன் - அவன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மா உதைப்ப - குதிரைகளுதைத்தலால்; மாற்றார் - பகைவரின், குடையெல்லாம் - குடைகளெல்லாம், கீழ் மேல் ஆய் கீழ்மேலாகி, ஆ உதை - ஆனிரைகளா லுதைக்கப்பட்ட, காளாம்பி போன்ற - காளாம்பியை யொத்தன, உவமன் - அவ்வுவமை, உறழ்வு இன்றி - மாறுபாடில்லாமல், ஒத்தது - பொருந்தியது எ-று. முதலடி முற்றுமோனை, ‘ஓ' வென்பது சிறப்புணர்த்திற்று. புனனாடன் என்பது சுட்டு. உவமன் என்புழிச் சுட்டு வருவிக்க கழுமலம் சேரநாட்டகத்ததோர் ஊராதல் வேண்டும். 'நற்றேர்க்குட்டுவன் கழுமலம்' என்பதும் காண்க. (36) 37. அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு முத்துடைக் கோட்ட களிறீர்ப்ப-எத்திசையும் பௌவம் புணரம்பி போன்ற புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை.) புனல் நாடன்- நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணம் - அரசர் பிணங்கள், கான்ற - சிந்திய நெய்த்தோர் - உதிர வெள்ளங்கள், எ திசைஉம் எல்லாத் திசைகளிலும், முரசுஒடு - முரசினோடு, முத்துஉடை - முத்தினையுடைய, கோட்ட - கொம்புகளையுடைய, களிறு - யானைகளை, ஈர்ப்ப - இழுப்ப (அவை) பௌவம் - கடலையும், புணர் (அக்கடலைச்) சார்ந்த, அம்பி - மரக்கலங்களையும், போன்ற-ஒத்தன எ-று. அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை அரசர் பிணம் என்றார். முரசினையும் களிற்றினையும் ஈர்ப்ப என்க. அவையெனச் சுட்டு வருவிக்க. கோட்ட: குறிப்புப் பெயரெச்சம். (37)
|