18

(ப-ரை.) போர் - போர்க்குரிய, கொடி-கொடியினையுடைய, தானை - படையினை உடையவனான, பொரு- மோதுகின்ற, புனல்-நீரினையுடைய, நீர் நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து - ஆரவாரித்து, அமர்-போரில், அட்ட - (பகைவரைக்) கொன்ற, களத்து - களத்தில் ஆர்ப்பு எழுந்த - ஆரவார மிகுந்த, ஞாட்பின் உள் - போரின்கண், ஆள் ஆள் ஆளும் ஆளும், எதிர்த்து ஓடி - எதிர்சென்றோடி, தாக்கி பொருது, எறிதர - (படைகளை) வீசுதலால், வீழ்தரும் - சொரியா நின்ற, ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்த்திகை சாறு இல் - கார்த்திகை விழாவில், கழிவிளக்கை - மிக்க விளக்கினை, போன்றன - ஒத்தன எ-று.

சாறு-விழா; இதனைச் 'சாறுதலைக் கொண்டென' என்னும் புறப்பாட்டானும், 'சாறயர்களத்து' என்னும் முருகாற்றுப்பபடையானும் அறிக. கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் மிக்கிருந்தது. இதனை 'குறுமயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேறும் அகலிருள் நடுநாள், மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப் - பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுடனயர வருகதி லம்ம' என்னும் அகப்பாட்டானறிக. 'துளக்கில்கபா லீச்சரத்தான் றொல்கார்த் திகைநாள்........ விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' என்பது திருநெறித் தமிழ்மறை . கார்த்திகைக்கு மலையில் விளக்கிடுவது 'குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' என்று சிந்தாமணியிற் கூறப்பெற்றுள்ளது. 

(17)

18.  நளிந்த கடலுட் டிமிறிரை போலெங்கும்
விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து
தடற்றிடங் கொள்வாட்1 டளையவிழுந் தார்ச்சே(ய்)
உடற்றியா ரட்ட களத்து.

(ப-ரை.) தெளிந்து - விளங்கி, தடறு - உறையினது, இடம் கொள் - இடத்தினைக் கொண்ட, வாள்-வாளையும் , தளை அவிழும் கட்டவிழ்ந்த, தார்-மாலையையுடைய, சேய்-செங்கட்சோழன், உடற்றியார்-சினமூட்டிய பகைவரை, அட்ட - கொன்ற, களத்து - போர்க்களத்தில், நளிந்த - நீர் செறிந்த, கடல்உள் கடலில், திமில்- தோணியையும், திரை - அலையையும், போல் போல, எங்கும்-எவ்விடத்தும், விளிந்தார் - பட்டாருடைய, பிணம்-பிணக் குப்பையை குருதி ஈர்க்கும் - உதிர வெள்ளம் இழாநிற்கும் எ-று.


1 . 'தடற்றிலங்கொள்வாள்' என்றும் பாடம்.