'தடற்றிலங் கொள்வாள்' என்னும் பாடத்திற்கு உறையில் விளங்குகின்ற 'ஒள்ளிய வாள்' என்று பொருளுரைக்க, நளிந்த நளியென்னும் உரிச்சொல்லடியாக வந்த பெயரெச்சம்; நீர்மிக்க எனினுமாம்; நளியென்பது பெருமையும், செறிவுமாதல் தொல்காப்பியத்தா னறிக. (18) 19. இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்கான் 1மூழ்கிக் கடைமணி காண்வரத் தோற்றி2 - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன் புக்கம ரட்ட களத்து. (ப-ரை.) நீர் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், அமர் புக்கு - போரிற் புகுந்து, அட்ட களத்து - (பகைவரைக் கொன்ற போர்க்களத்தில், மருப்பின் இடை - யானைகளின்) கொம்பினடுவே, விட்டு எறிந்த எஃகம் - விட்டெறிந்த வேல், கால் மூழ்கி - காம்பு குளித்தலால், கடைமணி - (அவ்வேலின்) கடைமணி, காண்வர - விளங்க, களிறு, எல்லாம் - யானைகளெல்லாம், தோற்றி - தோன்றி, நடைமெலிந்து - நடை தளர்ந்து, மு கோட்ட போன்ற - மூன்று கொம்புகளையுடைய யானைகளை யொத்தன எ-று. காழ் என்பதே சிறந்த பாடம். காழ்-காம்பு, மூழ்கலான் என்பது மூழ்கியெனத் திரிந்துநின்றது. முக்கோட்ட: இது குறிப்பு வினைப்பெயர். (19) 20. இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்3 சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. (ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், எருவை- கழுகுகள், இரு சிறகர் - இரண்டு சிறகின் கண்ணுமுள்ள, ஈர்க்கு பரப்பி - ஈர்க்குகளைப் பரப்பி, குருதி - உதிரத்தோடு, பிணம் கவரும் - பிணங்களைக் கொள்ளை கொள்ளும், தோற்றம் - காட்சி, அதிர்வு இலா கலக்கமில்லாத, சீர் - ஓசையையுடைய, முழ - முழவினை, பண் அமைப்பான் - பண்ணமைப்பவனை, போன்ற - ஒத்தன எ-று. சிறகர் : ஈற்றுப்போலி (20) 1 . 'எஃகங்காழ்' என்றும் பாடம். 2. 'தோன்றி ' என்றும் பாடம். 3 .'தோற்றந்திரலிலா' என்றும் பாடம்.
|