25

தில், மலை மடங்க எறிந்து - மலைகள் மறிய எறிந்து, உருட்டும் நீர் போல் - (அம் மலைகளை) உருட்டுகின்ற வெள்ளத்தைப்போல, தடம்கொண்ட - பரந்த, ஒள் குருதி-ஒள்ளிய உதிர வெள்ளம், கொல்களிறு - கொல்லப்பட்ட யானைகளை, ஈர்க்கும்-இழுத்துச் செல்லா நிற்கும் எ-று.

மறம் மொய்ம்பு - முறையே வீரமும் வலியும் எனினும் பொருந்தும். மடங்கல் என்னும் பாடத்திற்குச் சிங்கம் போல என்றும், மடங்குதல் அல்லாத என்றும் பொருள் கொள்ளலாகும். கொல்களிறு-கொலைத் தொழிலையுடைய யானை எனினும் அமையும். செங்கண் என்பதற்கு மேலுரைத்தமை காண்க. 

(30)

31.  ஓடா மறவ ரெறிய நுதல்பிளந்த
கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை
மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன்
ஒன்னாரை யட்ட களத்து.

(ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஒன்னாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா, மறவர் - புறங்கொடாத வீரர்கள், எறிய - வேலினை யெறிதலால், நுதல் பிளந்த - நெற்றி பிளந்த, கோடு ஏந்து - கொம்பினை யேந்திய, கொல் களிறு - கொல்லும் யானையின், கும்பத்து - மத்தகத்தில் (கட்டிய), எழில் ஓடை - அழகிய பட்டம், மின்னுகொடி இல் - (முகிலின்கண்) மின்னற்கொடி போல, மிளிரும் - விளங்கா நிற்கும் எ-று.

பிளந்தகளிறு ஏந்துகளிறு எனத் தனித்தனி முடிக்க, பிளந்த - பிளக்கப்பட்ட மின்னுக்கொடி - 'தொழிற் பெயரியல' என்பதனான் உகரம் பெற்றது.

(31)

32.  மையின்மா மேனி நிலமென்னும் நல்லவள் 
செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்1- பொய்தீர்ந்த
பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன்
காய்ந்தாரை யட்ட களத்து.

(ப-ரை.) பூ தார் - பூமாலையினையும், முரசு இன் -வெற்றி முரசினையுமுடைய, பொய்தீர்ந்த - வறத்தலில்லாத, பொரு(கரையோடு) மோதும், புனல் - நீரினையுடைய, நீர்நாடன் காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், காய்ந்தாரை - வெகுண்ட பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மை


1 . 'செவ்வென்றாள்' என்றும் பாடம்