குடர்கொண்டு1 வாங்குங் குறுநரி கந்தில் தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட் சேய்பொரு தட்ட களத்து. (ப-ரை.) அடர்- தகட்டுவடிவாகிய, பைம் பூண்- பசிய அணிகலத்தினையுடைய, சேய் - செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்-தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த-எதிர்த்தெழுந்த, மைந்தர் -வீரர்கள், சுடர் இலங்கு ஒளிவிளங்காநின்ற, எஃகம் - வேல்களை, எறிய - எறிதலால், சோர்ந்து உக்க - சரிந்து சிந்திய, குடர் கொண்டு - (வீரர்களின்) குடர்களைக் கவ்விக்கொண்டு, வாங்கும் - இழுக்கும், குறுநரி - குறு நரிகள், கந்துஇல் - தூணிலே (கட்டப்பட்ட), தொடர் ஓடு - சங்கிலியோடு (நின்ற), கோணாய் புரையும் - கோணாய்களை யொக்கும் எ-று. இணரிய - இணர்: பகுதி, இன்:இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய், குறுநரி - நரியின் ஒரு வகை: 'குறுநரி பட்டற்றால்' என்பது கலி. அடர்-தகடு. (34) 35. செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக் கரைகொன் றிழிதரூஉம் காவிரி நாடன் உரைசா லுடம்பிடி மூழ்க வரசோ(டு) அரசுவா வீழ்ந்த களத்து. (ப-ரை.) மல்கி- மிகுந்து, கரை கொன்று - கரைகளையழித்து, இழிதரும் - செல்லும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழனது, உரைசால் -புகழமைந்த, உடம்பிடி மூழ்க - வேல்கள் குளிப்ப, அரசுஓடு - அரசரோடு, அரசுஉவா- (பட்டம் பெற்ற) யானைகள், வீழ்ந்த களத்து - மறிந்து வீழ்ந்த களத்தின்கண் (அங்ஙனம் விழுந்தமை), செம் வரை - செவ்விய மலையின், சென்னி - உச்சியிலுள்ள, அரிமான் ஓடு - சிங்கத்துடன், அவரை - அந்த மலை, ஒல்கி - தளர்ந்து ; உருமிற்கு - இடியேற்றிற்கு, உடைந்தற்று - அடைந்தாற்போலும் எ-று. அரசற்கு அரிமானும், யானைக்கு மலையும் உவமம். உடைந்தால் என்பது உடைந்து என நின்றது. (35) 1 . 'குடர்கொடு' என்றும் பாடம்.
|