38. பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து) உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற் பொன்னார மாற்பிற் புனைகழற்காற் செம்பியன் துன்னாரை யட்ட களத்து. (ப-ரை.) செரு மொய்ம்பு இன் - போர் வலியினையும், பொன் ஆரம் - பொன்னாற் செய்த ஆரத்தை யணிந்த, மார்பு இன் மார்பினையும், புனைகழல்கால் - கட்டிய வீரக்கழலினையுடைய காலினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், துன்னாரை - பகைவரை, அட்ட களத்து- கொன்ற போர்க்களத்தில், பருமம் - பண்ணினையும், பணை - பருத்த; எருத்து இன் - பிடரினையுமுடைய, பல் யானை - பல யானைகள், புண்கூர்ந்து - (படைகளால்) புண்மிகுதலால், உரும் எறி - இடயேற்றா லெறியப்பட்ட, பாம்பு இன் பாம்பு போல, புரளும் - புரளாநிற்கும் எ-று. பருமம் - ஒப்பனை பாம்பின்:ஐந்தனுருபு ஒப்புப் பொருட்டு எருத்தின் முதலியவற்றில் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வருதலை, ‘மெல்லெழுத்து மிகுவழி என்னுஞ் சூத்திரத்து 'மெய்பெற' என்பதனாற் கொள்ப. (38) 39. மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுட் புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன் வஞ்சிக்கோ வட்ட களத்து (ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வஞ்சி கோ - வஞ்சி யரசனாகிய சேரனை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மைந்து - (வீரர்கள் தங்கள்) மறவர்கள், கால் யாத்து - காலைத் தளை செய்தலால், மயங்கிய - போகாதுமிடைந்த, ஞாட்பின் உள் - போரின் கண், கால் புய்ந்து போகி - காம்பு பறிந்து போகப்பட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, பறிந்து போகப்ப்ட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, வெண்குடை - வெள்ளைக் குடைகள், பஞ்சிபெய் - செம்பஞ்சுக் குழம்பு பெய்த, தாலம் ஏ போன்ற - தாலத்தையே யொத்தன எ-று. தாலம் - வட்டில், புய்ந்து - புய் : பகுதி, ‘புய்த்தெறி நெடுங்கழை' என்பது புறம். (39) 40. வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல் எல்லாக் களிறு நிலஞ்சோர்ந்த - பல்வேற் பணைமுழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால் கணைமாரி பெய்த களத்து
|