களவழி நாற்பது பாடல் தொகுப்பு 11 முதல் 15 வரை
 
11. கழுமிய ஞாட்பினுள் மைந்து இழந்தார் இட்ட
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து,
கண் காணா யானை உதைப்ப, இழுமென
மங்குல் மழையின் அதிரும்-அதிராப் போர்ச்
செங் கண் மால் அட்ட களத்து.
உரை
   
12. ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம்
தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப்
பூவல் அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றனவே-
காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக்
கூடாரை அட்ட களத்து.
உரை
   
13. நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும்-செரு மொய்ம்பின்
சேய் பொருது அட்ட களத்து.
உரை
   
14. கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க,
பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய
ஒண் செங் குருதி உமிழும்-புனல் நாடன்
கொங்கரை அட்ட களத்து.
உரை
   
15. கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும்
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன்
வினை படு பள்ளியின் தோன்றுமே-செங் கண்
சின மால் பொருத களத்து.
உரை