இதுவுமது 5. இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல் பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப் பவழஞ் சிதறி யவைபோலக் கோபந் தவழுந் தகைய புறவு. (ப-ரை.) பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவை போல - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பரக்குந் தகைமையை உடையவாயின ; (ஆதலால்), இகழுநர் சொல் அஞ்சி இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி ; சென்றார் - பொருள் தேடச்சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை மெய்யாம். எ-று. தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ்செய்யாதார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல்லஞ்சி' எனப்பட்டது. வடிவானும் தொழிலானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் தறியவை என்றமையால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழவடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியையேற்றது. கோபம் - கார்கலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர். (5) இதுவுமது 6. தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல் கடிதிடி வான முரறு நெடுவிடைச்1 சென்றாரை நீடன்மி னென்று. (ப-ரை.) வடு இடை - மாவடுவின் நடுவே. போழ்ந்து - பிளந்தாற்போலும், அகன்ற கண்ணாய் - பரந்த கண்களை யுடையாய் கடிது இடி வானம் - கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை - நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று - காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் - முழங்காநிற்கும்; (ஆதலால்) தொடி இட ஆற்றா - வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த - மெலிந்த, தோள் நோக்கி - தோள்களைப் பார்த்து வருந்தல் - வருந்தாதே எ.று.
1. நெறியிடை - என்றும் பாடம்
|