(ப-ரை.) பெண் இயல் நல்லாய் - பெண் தகைமையையுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து - மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி - நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் தோய்ந்தவை போல, காயாவும் - காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த - நுண்ணிய அரும்புகள் மலரப் பெற்ற, புறவு காடுகள், கூறும் - சொல்லாநிற்கும், எ-று. பெண் இயல் - நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனுமுந் துறத்த, நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப'என்று தொல்காப்பியம்கூறுவதுங் காண்க. காயாமலர் அஞ்சனத் தோய்ந்தாற்போலும் என்பதனை ‘செறியிலைக் காயா அஞ்சன மலர' என்னும் முல்லைப்பாட்டானும்அறிக. ஊழ்த்தல் - மலர்தல்; ‘இணரூழ்த்து நாறா மலர்' என்பது திருக்குறள்.புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க. (8) இதுவுமது 9. கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து. (ப-ரை.) கண்மலர் போல் பூத்தன - கண்மலர் போலப் பூத்தனவாகிய, கருவிளை - கருவிளம் பூக்களும், கார்க்கு ஏற்று - கார்ப்பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன - தீயினது அழகையுற்றனவாகிய, தோன்றி - தோன்றிப் பூக்களும், வரிவளை முன்கை இறப்ப - வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து - இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - வருதலை, கூறும் கூறா நிற்கும், எ-று. கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண்போலும் என்பதனைக் கண்ணெனக் ‘கருவிளை மலர' என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூ செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப்பூந் தோன்றி' என்பது பெருங்குறிஞ்சி.‘தோடார் தோன்றி குருதி பூப்ப' என்றார் பிறரும் உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல்கூறும் என முடிக்க. (9)
|