இதுவுமது 10. வானேறு வானத் துரற வயமுரண் ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக் கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி மேனி தளிர்ப்ப வரும். (ப-ரை.) என் தோழி என் தோழியே, வான்ஏறு - இடியேறு, வானத்து உரற - முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய - வலியினையும், முரண் - மாறுபாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் - எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு - அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப - எதிராகி வெகுள, கடுமான்தேர் - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினையுடைத்தாய், மேனி தளிர்ப்ப - நின்மேனி தழைக்க, வரும் - வாரா நிற்கின்றது, எ-று. வய - வலி; ‘வயவலி யாகும்' என்பது தொல்காப்பியம்.ஆன் என்னும்பெயர் எருமைக்குரித்தாதலும், ஒருத்தல் என்னும் பெயர் அதன்ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை ‘அருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்' என்னும் பதிற்றுப்பத்தானும் அறிக. செயவெனச்சம் முன்னைய விரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன. (10) இதுவுமது 11. புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார் வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும் அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல் பூங்குலை யீன்ற புறவு. (ப-ரை.) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய், கூந்தலையுடையாய், அணர்த்துஎழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர்கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூக்கொத்துக்களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு - (இம்மை மறுமையின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டு வர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் கூறாநிற்கின்றன, எ-று.
|