14

தருபாக்கு : வினையெச்சம் வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும் பீலி' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்' என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க.

(11)

இதுவுமது

12. மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய்
ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம்1
நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ
வைகலு மேரும் வலம்.

(ப-ரை.) மை எழில் - கருமையும் அழகும் பொருந்திய, உண்கண் - மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் - மயில் போலும் சாயலினையுடையாய், நெய் அணி குஞ்சரம்போல எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ - கரிய மேகங்கள், வைகலும் - நாடோறும், வலம் ஏரும் - வலமாக எழாநின்றன; (ஆதலால்) ஐயம் தீர் காட்சி - ஐயந்தீர்ந்த அறிவினையுடைய, அவர் - நம் தலைவர், வருதல் திண்ணிது -மீளவருதல் உண்மை, எ-று.

சாயல் - மென்மை : உரிச்சொல். ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி - அறிவு. காட்சியவர் எனக்குறிப்பு வினைப் பெயராக்கலும் ஒன்று. பொய் உள்ளீ டில்லாததாகலின் உண்மையைத் ‘திண்ணிது' என்றார் . ஆம் : அசை. இருமை - கருமை பெருமையுமாம். ஏர்தல் - எழுதல்; ‘பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு' என்பது முல்லைப்பாட்டு.

(12)

இதுவுமது

13. ஏந்தெழி லல்குலா யேமார்ந்த2 காதலர்
கூந்தல் வனப்பிற் பெயறாழ - வேந்தர்
களிநெறி வாளரவம் போலக்கண் வௌவி
ஒளிறுபு மின்னு மழை.


1. திண்ணிதால் என்றும் பாடம்

2. ஏமாந்த என்றும் பாடம்.