15

(ப-ரை.) எழில் - அழகினையுடைய, ஏந்து அல்குலாய் - ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் - தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் - சரிந்த கூந்தலினது, வனப்பின் - அழகுபோல, பெயல் தாழ - மழை பெய்ய, மழை முகில், வேந்தர் களிறு ஏறி - அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் - ஒலியினையுடைய, வாள் போல - வாளினைப்போல, கண் வௌவி - கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு - ஒளிவிட்டு , மின்னும் - மின்னா நின்றது; (ஆதலால் நம் காதலர் வருவர்) எ-று.

ஏம் - ஏமம் : கடைக்குறை காதலர் - ஈண்டு மகளிரை உணர்த்திற்று. ‘அரவம்' என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப்படும் மழையின் மின்னுக்கு வாள் உவம மாதலை, ‘அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித் தெறிவாளி னழிப்பன விளங்கு மின்னுடைக் கருவியை யாகி நாளுங் ‘கொன்னே செய்தியோ அரவம் - மழையே' என்னும் அகப்பாட்டானும் அறிக. கண் வௌவல் - கண் வழுக்குறச் செய்தல். ஒளிறுபு; செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது.

(13)

இதுவுமது

14. செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர்
வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய்
முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார்
மெல்ல வினிய நகும்.

(ப-ரை.) வயங்கிழாய் - விளங்காநின்ற அணிகளையுடையாய்! முல்லை - முல்லைக்கொடிகள், இலக்கு - விளங்குகின்ற, எயிறு ஈன மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் - நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும் - மெல்ல இனியவாக மின்னாநின்றன; (ஆதலால்) செல்வம் தரல்வேண்டி பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற - பிரிந்து சென்ற, நம் காதலர் - நமது தலைவர், வல்லே வருதல் - விரைந்து வருதலை, தெளிந்தாம் - தெளிய அறிந்தாம் எ-று.

வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம் தெளிந்தாம் : உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். ‘முல்லையெயிறீன' என்பது ஐந்திணையெழுபது. நறு - நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்' என்பதானும் அறிக.

(14)