18

ஒலியையுடைய, ஏறோடு - உருமேற்றுடனே, நடுநிற்ப - நடுவு நின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்்தார் மேனிபோல் - வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற - (முன்பு) பொலிவிழந்த, காடு - காடுகள், செல்வர் மனம்போல் பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற - அழசைத் தந்தன எ-று.

நல் - ஈண்டு மிக்க என்னும் பொருளது; ‘நன்று பெரிதாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினை முடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும்

(18)

வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது

19. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு.

(ப-ரை.) நாஞ்சில் வலவன் - கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல - வெண்ணிறம் போல, பூஞ்சினை பூங்கொம்பினையும், செங்கால் - செவ்விய தாளினையுமுடைய, மரா அம் - வெண்கடம்புகள், தகைந்தன - மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு - என் மனம், பைங்கோல் தொடி பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி - விளங்குகின்ற, முன் கையாள் - முன்னங்கையை யுடையாளின், தோள் - தோள்கள், துணையாவேண்டி - எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது - நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று.

நாஞ்சில் வலவன் - பலராமன்; அவன் வெண்ணிறமுடைய னென்பதனையும், கலப்பைப்படையால் வெற்றியுடையனென் பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்' என்னும் புறப்பாட்டானுமறிக. மராஅம் - வெண்கடம்பு; ‘செங்கான் மராஅத்த வாலிணர்' என்னும் திருமுருகாற்றுப் படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. ‘ஒருகுழை யொருவன் போலிணர்சேர்ந்த மராஅமும்' எனப் பாலைக் கலியிலும் வெண்டம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் - மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் ‘பிடவுமுகை தகைய' (ஐங்குறுநூறு) என்புழிக் காண்க. நெடு விடைக்கு முன்புரைத்தாங்குரைத்துக் கொள்க.

(19)