இதுவுமது 20. வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன ஆறும் பதமினிய வாயின - ஏறோ டருமணி நாக மனுங்கச் செருமன்னர் சேனைபோற் செல்லு மழை. (ப-ரை.) வீறுசால் - சிறப்பமைந்த, வேந்தன் - அரசனுடைய, வினையும் - போர்த்தொழில்களும், முடிந்தன - முற்றுப்பெற்றன, ஆறும் - வழிகளும், பதம்இனிய ஆயின - செவ்வி யினியவாயின, மழை - மேகங்கள், அருமணி - அரிய மணியையுடைய, நாகம் - பாம்புகள், அனுங்க - வருந்தும் வகை, ஏறொடு உருமேற்றுடனே, செருமன்னர் சேனைபோல் - போர்புரியும் வேந்தரின் சேனைபோல, செல்லும் - செல்லா நிற்கும்; (ஆதலால் நாம் செல்லக்கடவேம்) எ-று. இடியோசையால் நாகம் வருந்துதலை ‘விரிநிற நாகம் விடருளதேனும், உருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்' என்னும் நாலடியானறிக. ‘முதிர்மணி நாக மனுங்க முழங்கி' என்னும் திணை மொழியைம்பதும்ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும், முழங்கலும், அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று. (20) இதுவுமது. 21. பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற் செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய் முள்ளெயி றேய்ப்ப வடிந்து. (ப-ரை.) பொறிமாண் - எந்திரச் செய்கைகளான் மாட்சிமைப் பட்ட, புனை திண் தேர் அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர், போந்த வழியே - வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் - சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து - கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் - செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் - வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி - சிலவாகிய மொழியினையுமுடைய, பேதைவாய் - மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு - கூரிய பற்களை, ஏய்ப்ப - ஒவ்வா நிற்கும் எ-று. சின்மொழி - மெல்லிய மொழியுமாம். ‘முள்ளெயிறொக்க வடிவுபட்டு' என்று பொருளுரைத்து, ‘நின்றது' என்னும் பயனிலை
|