தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் ‘ஏய்ப்ப' என்பது வினையெச்சம். (21) இதுவுமது 22. இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம்போற் பூத்தன காடு. (ப-ரை.) இளையரும் - சேவகரும், ஈர்ங்கட்டு அயர - குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து - தலையாட்டம் அணிந்து, புல்உண் - புல்லினை யுண்ட, கலிமாவும் மனஞ்செருக்கிய குதிரையையும், பூட்டிய - தேருடன் பூட்டுதலைச் செய்ய, காடு - காடுகள், நல்லார் - நற்குணமுடைய மகளிரின், இளநலம் போல - இளமைச் செவ்விபோல, கவினி - அழகுற்று, வளம் உடையார் - வருவாயுடையாரது, ஆக்கம்போல் செல்வம்போல், பூத்தன - பொலிவுற்றன. (எ-று). இளையர் - சேவகர் ; ஏவலாளர், ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரைகாரர். உளை - தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய : செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' என்பதற்குப் பரிமேலழகர்உரைத்தஉரையானறிக. பூத்தல் - பொலிதல்; மலர்தலுமாம். (22) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது 23. கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந் தண்டுளி யாலி புரளப் புயல்கான்று கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ ஒண்டொடி யூடுநிலை. (ப-ரை.) ஒண்டொடி - ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் - காடெங்கும். கண்திரள் முத்தம் கடுப்ப - இடந்திரண்ட முத்தையொப்ப, தண்துளி - குளிர்ந்த நீர்த்துளிகளும் ஆலி - ஆலங்கட்டிகளும் , புரள - புரளும்வகை, புயல் - மேகம், கான்று கொண்டு - மழைபொழிந்து கொண்டு, எழில் - அழகினையுடைய, வானமும் கொண்டன்று - வானத் திடத்தையெல்லாம் கொண்டது;
|