சியையுடைய முகில், வென்றி முரசின் இரங்கி - வெற்றியை யறிவிக்கும் முரசின் ஒலியைப் போல இடித்து, நின்றும் - வானின்கண் இருந்தும், இரங்கும் - பரிவுறாநிற்கும் எ-று. முரசின் என்பதில் இன் உவமவுருபு நின்றும் என்பதற்குச் சலியாது நின்று என்று பொருள் கூறுவாருமுளர். வானின்கண் உள்ள மேகமும் இரங்கு மியல்பினாள் திறத்துத் தலைவர் இரங்கி வாராதது என்னை யென்றபடி. (35) வினைமுற்றி மீளுந் தலைமகள் பாகற்குச் சொல்லியது 36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர் நல்விருந் தாக நமக்கு. (ப-ரை.) ஈர் தண் - குளிர்ச்சி மிக்க, தளவம் - செம்முல்லைப் பூக்கள், சிரல் சிச்சிலிக் குருவியின், வாய் - வாய்போலும், வனப்பின ஆகி - அழகுடையனவாகி, நிரல் ஒப்ப - வரிசை பொருந்த, தகைந்தன - அரும்பின; (ஆதலால் இப்பொழுது) சீர்த்தக்க - சிறந்த, செல்வம் - செல்வத்தையுடைய, மழை மதர்க்கண் - மழைபோற் குளிர்ந்த மதர்த்த கண்களையும், சில் மொழி - சிலவாகிய மொழியினையு முடைய, பேதை - காதலியது, ஊர் - ஊரானது, நமக்கு நல்விருந்து ஆக - நமக்கு நல்ல விருந்தயரும் இடமாக்கடவது எ-று. சிரல் - மீன்குத்திக் குருவி. தளவம் - செம்முல்லை; இதன் அரும்பு சிரலின் வாய்போலும் என்பதனை, ‘பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை' என்னும் ஐங்குறுநூற்றானும் அறிக. ஈர்ந்தண்; ஒருபொரு ளிருசொல். சீர்த்தக்க : ஒரு சொன்னீர்மைத்து. செல்வத்தையுடைய பேதை என்க; செல்வமழை எனினும் ஆம். விருந்து : ஆகுபெயர். தலைவன் வினைமுற்றி மீண்டபின் காதலியுடன் விருந்தயரும் வழக்கமுண்டென்பதனை ‘வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து, மாலை யயர்கம் விருந்து' என்னும் முப்பாலானும் அறிக. (36) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது 37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும் பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன் அருந்தொழில் வாய்த்த நமர்.
|