குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள்
முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண்
கேட்டதனால்,துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது
123. இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்;
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண்;-நம்மை
எளியர் என நலிந்த ஈர்ங்குழலார், ஏடி!
தெளியச் சுடப்பட்டவாறு!