யாக்கை நிலையாமை
 
21. மலைமிசைத் தோன்றும் மதியம்போல், யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர், நிலமிசைத்
துஞ்சினார் என்று எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால்,
எஞ்சினார் இவ் உலகத்து இல்.
உரை
   
22. வாழ்நாட்கு அலகா, வயங்கு ஒளி மண்டிலம்
வீழ் நாள் படாஅது எழுதலால், வாழ்நாள்
உலவாமுன் ஒப்புரவு ஆற்றுமின்; யாரும்
நிலவார், நிலமிசை மேல்.
உரை
   
23. 'மன்றம் கறங்க மணப் பறை ஆயின,
அன்று அவர்க்கு ஆங்கே, பிணப் பறை ஆய், பின்றை
ஒலித்தலும் உண்டாம்' என்று, உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம்-மாண்டார் மனம்.
உரை
   
24. சென்றே எறிப ஒருகால்; சிறு வரை
நின்றே எறிப, பறையினை; நன்றேகாண்,
முக் காலைக் கொட்டினுள், மூடி, தீக் கொண்டு எழுவர்,
செத்தாரைச் சாவார் சுமந்து!
உரை
   
25. கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலற,
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும், மணம் கொண்டு, ஈண்டு,
'உண்டு, உண்டு, உண்டு' என்னும் உணர்வினான்-சாற்றுமே,
'டொண் டொண் டொண்' என்னும் பறை.
உரை
   
26. நார்த் தொடுத்து ஈர்க்கில் என்? நன்று ஆய்ந்து அடக்கில் என்?
பார்த்துழிப் பெய்யில் என்? பல்லோர் பழிக்கில் என்?-
தோற்பையுள்நின்று, தொழில் அறச் செய்து ஊட்டும்
கூத்தன் புறப்பட்டக்கால்.
உரை
   
27. 'படு மழை மொக்குளின் பல் காலும் தோன்றி,
கெடும், இது ஓர் யாக்கை' என்று எண்ணி, 'தடுமாற்றம்
தீர்ப்பேம் யாம்' என்று உணரும் திண் அறிவாளரை
நேர்ப்பார் யார், நீள் நிலத்தின்மேல்?
உரை
   
28. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர், தாம் பெற்ற
யாக்கையால் ஆய பயன் கொள்க-யாக்கை
மலை ஆடும் மஞ்சுபோல் தோன்றி, மற்று ஆங்கே
நிலையாது நீத்துவிடும்!
உரை
   
29. 'புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை' என்று எண்ணி,
இன்னினியே செய்க அறவினை-'இன்னினியே
நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச்
சென்றான்' எனப்படுதலால்!
உரை
   
30. கேளாதே வந்து, கிளைகளாய் இல் தோன்றி,
வாளாதே போவரால், மாந்தர்கள்-வாளாதே.
சேக்கை மரன் ஒழியச் சேண் நீங்கு புள் போல,
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து.
உரை