தூய்தன்மை
 
41. 'மாக் கேழ் மட நல்லாய்!' என்று அரற்றும் சான்றவர்
நோக்கார்கொல், நொய்யது ஓர் துச்சிலை? யாக்கைக்கு ஓர்
ஈச் சிறகு அன்னது ஓர் தோல் அறினும், வேண்டுமே,
காக்கை கடிவது ஓர் கோல்!
உரை
   
42. தோற் போர்வைமேலும் துளை பலவாய், பொய்ம் மறைக்கும்
மீப் போர்வை மாட்சித்து, உடம்பு; ஆனால், மீப் போர்வை
பொய்ம் மறையா, காமம் புகலாது, மற்று அதனைப்
பைம் மறியாப் பார்க்கப்படும்.
உரை
   
43. தக்கோலம் தின்று, தலை நிறையப் பூச் சூடி,
பொய்க் கோலம் செய்ய, ஒழியுமே-'எக்காலும்
உண்டி வினையுள் உறைக்கும்' எனப் பெரியோர்
கண்டு, கைவிட்ட மயல்?
உரை
   
44. 'தெள் நீர்க் குவளை, பொரு கயல், வேல்' என்று,
கண் இல் புன்மாக்கள் கவற்ற, விடுவெனோ-
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டன்ன
கண் நீர்மை கண்டு ஒழுகுவேன்?
உரை
   
45. 'முல்லை முகை, முறுவல், முத்து' என்று இவை பிதற்றும்
கல்லாப் புன்மாக்கள் கவற்ற விடுவெனோ-
எல்லாரும் காண, புறங்காட்டு உதிர்ந்து உக்க
பல்-என்பு கண்டு ஒழுகுவேன்?
உரை
   
46. குடரும், கொழுவும், குருதியும், என்பும்,
தொடரும் நரம்பொடு தோலும், இடையிடையே
வைத்த தடியும், வழும்பும், ஆம் மற்று இவற்றுள்
எத் திறத்தாள், ஈர்ங் கோதையாள்?
உரை
   
47. ஊறி, உவர்த்தக்க ஒன்பது வாய்ப் புலனும்
கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை, பேதை,
'பெருந்தோளி! பெய்வளாய்!' என்னும்-மீப் போர்த்த
கருந் தோலால் கண் விளக்கப்பட்டு.
உரை
   
48. பண்டம் அறியார், படு சாந்தும் கோதையும்
கண்டு, பாராட்டுவார் கண்டிலர்கொல்-மண்டிப்
பெடைச் சேவல் வன் கழுகு பேர்த்து இட்டுக் குத்தல்,
முடைச் சாகாடு அச்சு இற்றுழி?
உரை
   
49. கழிந்தார் இடு தலை, கண்டார் நெஞ்சு உட்க,
குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி, ஒழிந்தாரை,
'போற்றி நெறி நின்மின்; இற்று, இதன் பண்பு' என்று
சாற்றும்கொல், சாலச் சிரித்து!
உரை
   
50. உயிர் போயார் வெண் தலை உட்கச் சிரித்து,
செயிர் தீர்க்கும், செம்மாப்பவரை; செயிர் தீர்ந்தார்
கண்டு, 'இற்று, இதன் வண்ணம்' என்பதனால், தம்மை ஓர்
பண்டத்துள் வைப்பது இலர்.
உரை