பொறையுடைமை
 
71. கோதை அருவிக் குளிர் வரை நல் நாட!
பேதையோடு யாதும் உரையற்க! பேதை,
உரைக்கின், சிதைந்து உரைக்கும்; ஒல்லும் வகையால்,
வழுக்கிக் கழிதலே நன்று.
உரை
   
72. நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால், மற்று அது
தாரித்திருத்தல் தகுதி; மற்று ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது, பொங்கு நீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டுவிடும்.
உரை
   
73. காதலார் சொல்லும் கடுஞ் சொல், உவந்து உரைக்கும்
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ-போது எலாம்
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப!-
ஆவது அறிவார்ப் பெறின்?
உரை
   
74. அறிவது அறிந்து, அடங்கி, அஞ்சுவது அஞ்சி,
உறுவது உலகு உவப்பச் செய்து, பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்புடையார், எஞ் ஞான்றும்,
துன்புற்று வாழ்தல் அரிது.
உரை
   
75. வேற்றுமை இன்றிக் கலந்து, இருவர் நட்டக்கால்,
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்,
ஆற்றும் துணையும் பொறுக்க! பொறான் ஆயின்
தூற்றாதே, தூர விடல்!
உரை
   
76. 'இன்னா செயினும், இனிய ஒழிக! என்று,
தன்னையே தான் நோவின் அல்லது, துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல்-கானக நாட!
விலங்கிற்கும் விள்ளல் அரிது!
உரை
   
77. பெரியார் பெரு நட்புக் கோடல், தாம் செய்த
அரிய பொறுப்ப என்று அன்றோ? அரியரோ-
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட!-
நல்ல செய்வார்க்குத் தமர்?
உரை
   
78. வற்றி, மற்று ஆற்றப் பசிப்பினும், பண்பு இலார்க்கு
அற்றம் அறிய உரையற்க! அற்றம்
மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே, தம்மைத்
துறக்கும் துணிவு இலாதார்.
உரை
   
79. இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்,
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க! இன்பம்
ஒழியாமை கண்டாலும்-ஓங்கு அருவி நாட!-
பழி ஆகா ஆறே தலை.
உரை
   
80. தான் கெடினும், தக்கார் கேடு எண்ணற்க! தன் உடம்பின்
ஊன் கெடினும், உண்ணார் கைத்து உண்ணற்க! வான் கவிந்த
வையகம் எல்லாம் பெறினும், உரையற்க,
பொய்யோடு இடை மிடைந்த சொல்!
உரை