பிறர்மனை நயவாமை
 
81. அச்சம் பெரிதால்; அதற்கு இன்பம் சிற்றளவால்;
நிச்சல் நினையுங்கால் கோக் கொலையால்; நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால்;-பிறன் தாரம்
நம்பற்க, நாண் உடையார்!
உரை
   
82. அறம், புகழ், கேண்மை, பெருமை இந் நான்கும்
பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா; பிறன் தாரம்
நச்சுவார்ச் சேரும், பகை, பழி, பாவம் என்று
அச்சத்தோடு இந் நாற் பொருள்.
உரை
   
83. புக்க இடத்து அச்சம்; போதரும் போது அச்சம்;
துய்க்கும் இடத்து அச்சம்; தோன்றாமைக் காப்பு அச்சம்;
எக் காலும் அச்சம் தருமால்; எவன்கொலோ,
உட்கான், பிறன் இல் புகல்?
உரை
   
84. காணின், குடிப் பழி ஆம்; கையுறின், கால் குறையும்;
ஆண் இன்மை செய்யுங்கால், அச்சம் ஆம்; நீள் நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி! நீ கண்ட
இன்பம், எனக்கு, எனைத்தால்? கூறு.
உரை
   
85. செம்மை ஒன்று இன்றி, சிறியார் இனத்தர் ஆய்,
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ, உம்மை,
வலியால் பிறர் மனைமேல் சென்றாரே-இம்மை,
அலி ஆகி, ஆடி உண்பார்.
உரை
   
86. பல்லார் அறியப் பறை அறைந்து, நாள் கேட்டு,
கல்யாணம் செய்து, கடி புக்க மெல் இயல்.
காதல் மனையாளும் இல்லாளா, என், ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு?
உரை
   
87. அம்பல் அயல் எடுப்ப, அஞ்சித் தமர் பரீஇ,
வம்பலன் பெண் மரீஇ, மைந்துற்று, நம்பும்
நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு-பாம்பின்
தலை நக்கியன்னது உடைத்து.
உரை
   
88. பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா,
உரவோர்கண் காம நோய்,-ஓஒ கொடிதே!-
விரவாருள் நாணுப்படல் அஞ்சி, யாதும்
உரையாது, உள் ஆறிவிடும்.
உரை
   
89. அம்பும், அழலும், அவிர் கதிர் ஞாயிறும்,
வெம்பிச் சுடினும், புறம் சுடும்; வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப்படும்.
உரை
   
90. ஊருள் எழுந்த உரு கெழு செந் தீக்கு
நீருள் குளித்தும் உயல் ஆகும்; நீருள்
குளிப்பினும், காமம் சுடுமே; குன்று ஏறி
ஒளிப்பினும், காமம் சுடும்.
உரை