கூடா நட்பு
 
231. செறிப்பு இல் பழங் கூரைச் சேறு அணை ஆக
இறைத்தும், நீர் ஏற்றும், கிடப்பர்,-கறைக் குன்றம்
பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட!-
தம் கருமம் முற்றும் துணை.
உரை
   
232. சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய்,
மாரிபோல் மாண்ட பயத்தது ஆம்; மாரி
வறந்தக்கால் போலுமே,-வால் அருவி நாட!-
சிறந்தக்கால் சீர் இலார் நட்பு.
உரை
   
233. நுண் உணர்வினாரொடு கூடி நுகர்வு உடைமை
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால்; நுண் நூல்
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார்ப்
புணர்தல் நிரயத்துள் ஒன்று.
உரை
   
234. பெருகுவது போலத் தோன்றி, வைத் தீப்போல்
ஒருபொழுதும் செல்லாதே நந்தும்,-அருகு எல்லாம்
சந்தன நீள் சோலைச் சாரல் மலை நாட!
பந்தம் இலாளர் தொடர்பு.
உரை
   
235. ‘செய்யாத செய்தும் நாம்’ என்றலும், செய்வதனைச்
செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும், மெய்யாக
இன்புறூஉம் பெற்றி இகழ்ந்தார்க்கும், அந் நிலையே
துன்புறூஉம் பெற்றி தரும்.
உரை
   
236. ஒரு நீர்ப் பிறந்து, ஒருங்கு நீண்டக்கடைத்தும்,
விரி நீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா;-
பெரு நீரார் கேண்மை கொளினும், நீர் அல்லார்
கருமங்கள் வேறுபடும்.
உரை
   
237. முற்றல் சிறு மந்தி முற்பட்ட தந்தையை
நெற்றுக் கண்டன்ன விரலால் ஞெமிர்த்திட்டுக்
குற்றிப் பறிக்கும் மலை நாட! இன்னாதே,
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.
உரை
   
238. முட்டு உற்ற போழ்தில் முடுகி, என் ஆர் உயிரை
நட்டான் ஒருவன் கை நீட்டேனேல், நட்டான்
கடி மனை கட்டு அழித்தான் செல்வுழிச் செல்க!
நெடுமொழி வையம் நக!
உரை
   
239. ஆன் படுநெய் பெய் கலனுள் அது களைந்து,
வேம்பு அடு நெய் பெய்தனைத்துஅரோ-தேம் படு
நல் வரை நாட!-நயம் உணர்வார் நண்பு ஒரீஇ,
புல்லறிவினாரொடு நட்பு.
உரை
   
240. உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை,
பருகற்கு அமைந்தபால் நீர் அளாயற்றே;
தெரிவு உடையார் தீஇனத்தர் ஆகுதல், நாகம்
விரி பெடையோடு ஆடி, விட்டற்று.
உரை