நன்னெறியில் செல்வம்
 
261. அருகலது ஆகிப் பல பழுத்தக்கண்ணும்,
பொரி தாள் விளவினை வாவல் குறுகா;-
பெரிது அணியர் ஆயினும், பீடு இலார் செல்வம்
கருதும் கடப்பாட்டது அன்று.
உரை
   
262. அள்ளிக்கொள்வன்ன குறு முகிழ ஆயினும்,
கள்ளிமேல் கைந் நீட்டார், சூடும் பூ அன்மையால்;-
செல்வம் பெரிது உடையர் ஆயினும், கீழ்களை
நள்ளார், அறிவுடையார்.
உரை
   
263. மல்கு திரைய கடற் கோட்டு இருப்பினும்,
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர்;-
செல்வம் பெரிது உடையர் ஆயினும், சேண் சென்றும்
நல்குவார்கட்டே நசை.
உரை
   
264. புணர் கடல் சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே-
உணர்வது உடையார் இருப்ப, உணர்வு இலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்பவே,
பட்டும் துகிலும் உடுத்து!
உரை
   
265. நல்லார் நயவர் இருப்ப, நயம் இலாக்
கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம், தொல்லை
வினைப் பயன் அல்லது,-வேல் நெடுங் கண்ணாய்!-
நினைப்ப வருவது ஒன்று இல்.
உரை
   
266. நாறாத் தகடே போல் நல் மலர்மேல் பொற்பாவாய்!-
நீறாய் நிலத்து விளிஅரோ-வேறு ஆய
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ, பொன் போலும்
நன்மக்கள் பக்கம் துறந்து!
உரை
   
267. நயவார்கண் நல்குரவு நாண் இன்று கொல்லோ?
பயவார்கண் செல்வம் பரம்பப் பயின்கொல்?
வியவாய்காண்,-வேற் கண்ணாய்!-இவ் இரண்டும் ஆங்கே
நயவாது நிற்கும் நிலை.
உரை
   
268. வலவைகள் அல்லாதார், கால் ஆறு சென்று,
கலவைகள் உண்டு, கழிப்பர்; வலவைகள்
கால் ஆறும் செல்லார், கருனையால் துய்ப்பவே,
மேல் ஆறு பாய, விருந்து.
உரை
   
269. பொன் நிறச் செந்நெல் பொதியொடு பீள் வாட,
மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும்-
வெண்மை உடையார் விழுச் செல்வம் எய்தியக்கால்,
வண்மையும் அன்ன தகைத்து.
உரை
   
270. ஓதியும் ஓதார், உணர்வு இலார்; ஓதாதும்
ஓதி அனையார், உணர்வு உடையார்; தூய்து ஆக
நல்கூர்ந்தும் செல்வர், இரவாதார்; செல்வரும்
நல்கூர்ந்தார், ஈயார் எனின்.
உரை