இன்மை
 
281. அத்து இட்ட கூறை அரைச் சுற்றி வாழினும்,
பத்து எட்டு உடைமை பலருள்ளும் பாடு எய்தும்;
ஒத்த குடிப் பிறந்தக்கண்ணும், ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை.
உரை
   
282. நீரினும் நுண்ணிது நெய் என்பர்; நெய்யினும்
யாரும் அறிவர் புகை நுட்பம்; தேரின்,
நிரப்பு இடும்பையாளன் புகுமே, புகையும்
புகற்கு அரிய பூழை நுழைந்து.
உரை
   
283. கல் ஓங்கு உயர் வரைமேல் காந்தள் மலராக்கால்,
செல்லாவாம், செம் பொறி வண்டுஇனம்;-கொல்லைக்
கலாஅல் கிளி கடியும் கானக நாட!-
இலாஅஅர்க்கு இல்லை, தமர்.
உரை
   
284. உண்டாய போழ்தின், உடைந்துழிக் காகம்போல்,
தொண்டு ஆயிரவர் தொகுபவே; வண்டாய்த்
திரிதரும் காலத்து, ‘தீது இலிரோ?’ என்பார்
ஒருவரும் இவ் உலகத்து இல்.
உரை
   
285. பிறந்த குலம் மாயும்; பேர் ஆண்மை மாயும்;
சிறந்த தம் கல்வியும் மாயும்;-கறங்கு அருவி
கல்மேல் கழூஉம் கண மலை நல் நாட!-
இன்மை தழுவப்பட்டார்க்கு.
உரை
   
286. உள் கூர் பசியால் உழை நசைஇச் சென்றார்கட்கு,
உள்ளூர் இருந்தும், ஒன்று ஆற்றாதான், உள்ளூர்
இருந்து, உயிர் கொன்னே கழியாது, தான் போய்
விருந்தினன் ஆதலே நன்று.
உரை
   
287. நீர்மையே அன்றி, நிரம்ப எழுந்த தம்
கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர்,-கூர்மையின்
முல்லை அலைக்கும் எயிற்றாய்!-நிரப்பு என்னும்
அல்லல் அடையப்பட்டார்.
உரை
   
288. இட்டு ஆற்றுப்பட்டு, ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது,
முட்டு ஆற்றுப்பட்டு, முயன்று, உள்ளூர் வாழ்தலின்,
நெட்டாற்றுச் சென்று, நிரை மனையில் கைந் நீட்டும்
கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று.
உரை
   
289. கடகம் செறிந்த தம் கைகளால் வாங்கி,
அடகு பறித்துக்கொண்டு அட்டு, குடை கலனா,
உப்பு இலி வெந்தை தின்று, உள் அற்று, வாழ்பவே-
துப்புரவு சென்று உலந்தக்கால்.
உரை
   
290. ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டுஇனம்
பூத்து ஒழி கொம்பின்மேல் செல்லாவாம்;-நீர்த்து அருவி
தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட!-
வாழாதார்க்கு இல்லை, தமர்.
உரை