அவையறித்தல்
 
311. மெய்ஞ் ஞானக் கோட்டி உறழ்வழி விட்டு, ஆங்கு ஓர்
அஞ்ஞானம் தந்திட்டு, அது ஆங்கு அறத் துழாய்,
கைஞ் ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்,
சொல் ஞானம் சோர விடல்!
உரை
   
312. நாப் பாடம் சொல்லி நயம் உணர்வார்போல் செறிக்கும்
தீப் புலவற் சேரார், செறிவுடையார்; தீப் புலவன்
கோட்டியுள், குன்றக் குடி பழிக்கும்; அல்லாக்கால்,
தோள் புடைக்கொள்ளா எழும்.
உரை
   
313. சொல்-தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் காமுறுவர்,
கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார், கற்ற
செல உரைக்கும் ஆறு அறியார், தோற்பது அறியார்,
பல உரைக்கும் மாந்தர் பலர்.
உரை
   
314. கற்றதூஉம் இன்றி, கணக்காயர் பாடத்தால்
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம்; மற்று அதனை
நல்லாரிடைப் புக்கு, நாணாது சொல்லி, தன்
புல்லறிவு காட்டிவிடும்.
உரை
   
315. வென்றிப் பொருட்டால் விலங்கு ஒத்து, மெய் கொள்ளார்,
கன்றிக் கறுத்து எழுந்து, காய்வாரோடு ஒன்றி,
உரை வித்தகம் எழுவார் காண்பவே, கையுள்
சுரை வித்துப் போலும் தம் பல்.
உரை
   
316. பாடமே ஓதிப் பயன் தெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால், கேடு அருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்று அவரை
ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.
உரை
   
317. பெறுவது கொள்பவர் தோள்போல், நெறிபட்டுக்
கற்பவர்க்கு எல்லாம் எளிய, நூல்; மற்று அம்
முறி புரை மேனியர் உள்ளம் போன்று, யார்க்கும்
அறிதற்கு அரிய, பொருள்.
உரை
   
318. புத்தகமே சாலத் தொகுத்தும், பொருள் தெரியார்,
உய்த்து, அகம் எல்லாம் நிறைப்பினும், மற்று அவற்றைப்
போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு.
உரை
   
319. பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், இந் நான்கின்
கொழித்து, அகலம் காட்டாதார் சொற்கள்,-பழிப்பு இல்
நிரை ஆமா சேக்கும் நெடுங் குன்ற நாட!-
உரை ஆமோ, நூலிற்கு நன்கு?
உரை
   
320. இற் பிறப்பு இல்லார் எனைத்து நூல் கற்பினும்,
சொல் பிறரைக் காக்கும் கருவியரோ? இற் பிறந்த
நல் அறிவாளர், நவின்ற நூல் தேற்றாதார்
புல்லறிவு தாம் அறிவது இல்.
உரை