பழவினை
 
அறத்துப்பால்
11. பழவினை

(முற்பிறப்பிற் செய்த வினைகளின் விளைவைப்பற்றி நுவல்வது)
101பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.

(பொ-ள்.) பல் ஆவுள் உய்த்துவிடினும் - பல ஆக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ; குழக் கன்று - இளைய ஆன்கன்று, வல்லதாம் தாய் நாடிக் கோடலை - தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை, வல்லதாகும்; தொல்லைப் பழவினையும் - பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன் செய்த கிழவனை நாடிக் கொளற்கு - தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அன்ன தகைத்தே - அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.

(வி-ம்.) "மழவுங் குழவும் இளமைப் பொருள"1 வாதலின் குழக்கன்றென்றது, இளங்கன்றை. தாய், இரு திணைக்கும் பொதுப் பெயர்; ‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்' 2 என்ற விடத்து, "எல்லாப் பெயரும்" என்றதனால் இம்முறைப் பெயரும் பெறப்பட்டது. ‘தொல்லை' யென்றார், தொடர்ந்து வருதல் தோன்ற. கிழவன் - உரிமையுடையோன். விடாது பற்றும் என்றற்கு, இவ்வுரிமைப் பொருள் உணர்த்துஞ் சொல் வந்தது. (1)



1. தொல் . உரி. 14.

2. தொல். பெய. 26.