(பொ-ள்.) வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை - செழுமை பெற விரும்பாதவர் உலகில் ஒருவருமில்லை, அளந்தன போகம் அவரவர் ஆற்றல் - ஆனால் இன்பநுகர்வு அவரவர் முன்வினைப்படியே அளவு செய்யப்பட்டுள்ளன. விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக் கார் எனச் செய்தாரும் இல் - விளங்காயை உருண்டை வடிவினதாக அமைத்தவரும் இல்லை, களம்பழக்கத்தைக் கரிய உருவினதாகச் செய்தவரும் இல்லையாதல் போல வென்க. (க-து.) அவ்வவற்றின் முறைப்படியே அவையவை அமைதலின், வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ப நல்வினை செய்தல் வேண்டும். (வி-ம்.) யார்யாரு மில்லை என்னும் அடுக்கு எஞ்சாமைப் பொருளது. ஆற்றால் - வினைவழியே. ‘திரட்டினாரில்லை; செய்தாருமில்' என்றது, எடுத்துக்காட்டுவமையணி. (3) 1. சிந். நாம. 184.
|