(பொ-ள்.) உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா - உருத்து வருந் தீவினைகளை நீக்குதல் சான்றோர்க்கும் ஆகாது, பெறற்பால் அனையவும் அன்னவாம் - அங்ஙனமே அடைந்தின்புறற்குரிய நன்மைகளும் அப்பெரியோர்களால் தடை செய்தற்குரியன அல்லவாம், மாரி வறப்பின் தருவாரும் இல்லை, சிறப்பின் அதனைத் தணிப்பாரும் இல் - மழை பெய்யாதொழியின் அதனைப் பெய்விருப்பாருமில்லை ; மிகப் பெய்யின் அதனைத் தணிப்பாருமில்லை யாதல்போல வென்க. (க-து.) இருவினைகளும் பொருந்தியே தீருமாதலின், தீவினைகளை நீக்கி நல்வினைகளைச் செய்தல் இன்றியமையாததாகும். (வி-ம்.) உறுவர் - தக்கோர் . ஆகா ; பன்மையன்று ஈறுதொகுத்தல். தீவினைகளை ஒப்பவே தவறாது வந்து பொருந்துவவான என்றற்கு ' அனையவும் ' எனப்பட்டது. தருவாரும் தணிப்பாருமென்னும் உம்மைகள் ஒன்றையொன்று தழீஇ நின்றன. ஆற்றலாகிய வினையின் விளைவு அமையினன்றி மாரி தருவாருமில்லை, தணிப்பாருமில்லை என்பது கருத்தாகக் கொள்க. (4)
|