பழவினை
 
அறத்துப்பால்
11. பழவினை
105தினைத்துணைய ராகித்தந் தேசுள் ளடக்கிப்
பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலை
வினைப்பய னல்லாற் பிற.

(பொ-ள்.) தினைத்துணையராகித் தேசுஉள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் - பனையளவினரான பெருமையுடையோர் சிலர் நாடோறும் பெருமை குறைந்து தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தில் அடக்கிக் கொண்டு உலகில் உயிர்பொறுத் திருக்கின்றனர்; நினைப்பக் கிடந்தது எவன் உண்டு மேலை வினைப்பயன் அல்லால் பிற - இதற்குக் காரணம் முன்னை வினைப்பயனல்லால் வேறு கருதக் கிடந்தது யாதுண்டு!

(க-து.) முன்னைத் தீவினை எத்தகைய பெரியோரையும் உருத்து வருத்தும்.

(வி-ம்.) தினை பனை யென்னும் அளவுகள் கண்ணியங் கருதின. எவனுண்டாம் என்பதில், ‘ஆம்' அசைநிலை. பிற, வேறு என்னும் பொருட்டு, தேசு என்பது மேன்மைப் பொருட்டாதல் "வலிச்சினமும் மானமும் தேசும்"1 என்னும் புறப்பொருள் வெண்பா மாலையினுங் காண்க.

(5)


1. புறம். வெ. 2 : 4.