பழவினை
 
அறத்துப்பால்
11. பழவினை
107இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாருங் காண
நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் - அடம்பப்பூ
அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
முன்னை வினையாய் விடும்.

(பொ-ள்.) அடம்பப்பூ அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப - அடம்பங்கொடியின் மலரை அன்னப் பறவைகள் கோதுகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த துறைவனே, இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வதெல்லாம் - மக்களிற் சிலர், துன்பம் மிக்க உள்ளத்தவராய் எல்லாருங் காணும்படி பெரிய வீடுகளின் நெடிய தலைவாயிலில் நின்று பிச்சையேற்றுழல்வதெல்லாம், முன்னை வினையாய் விடும் - ஆராய்ந்து பார்க்குங்கால் பழவினைப்பயனாய் முடிந்து நிற்கும்.

(க-து.) நல்வினையுடையோர் இரந்துழலார்.

(வி-ம்.) ஏளனமும் இரக்கமுந் தோன்ற ‘எல்லாருங் காண' எனவும், உழல்வாரது ஏழைமை நன்கு வெளிப்பட ‘நெடுங்கடை' எனவுங் கூறப்பட்டன. அடம்பு நெய்தல் நிலத்து நீர்ப் பூங்கொடி. "அடும்பிவர் அணியெக்கர்"1 என்றார் பிறரும்.

(7)


1. கலி. 132 : 16.