பழவினை
 
அறத்துப்பால்
11. பழவினை
109ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துணையும்
வேண்டார்மன் தீய ; விழைபயன் நல்லவை ;
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுத லரிது.

(பொ-ள்.) ஈண்டு நீர் வையத்துள் - மிக்க நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தில், எல்லாரும் எத்துணையும் வேண்டார் தீய - யாரும் சிறிதும் துன்பந்தருந் தீயவற்றை விரும்பமாட்டார்கள். விழை பயன் நல்லவை - எல்லாரும் எவ்வளவும் விரும்புகின்ற பயன்கள் இன்பந்தரும் நல்லனவே, வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது - மக்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அவர்கள்பால் வந்து பொருந்துதற்குரியன பொருந்தாதொழிதல் இல்லை.

(க-து.) இன்பந் தரும் நல்லவற்றையே மக்கள் விரும்புதலால், அவற்றிற்கேற்றபடி நல்வினைகளைச் செய்து வரல்வேண்டும்.

(வி-ம்.) மன் : அசைநிலை. ‘தீண்டா' என்னும் வினையெச்ச ஈறு தொக்கது. அரிதென்றது, "மனக்கவலை மாற்றலரிது"1 என்புழிப்போல இன்மைப் பொருட்டு.

(9)


1. குறள். 1 : 7.