(பொ-ள்.) சிறுகாலைப் பட்ட பொறியும் - கருவமையுங் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகளும், சிறுகா பெருகா முறை பிறழ்ந்து வாரா உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும் - குறையமாட்டா, மிகமாட்டா, முறைமாறிப் பொருந்தமாட்டா, உற்ற காலத்தில் உதவியாக மாட்டா, உதவியாதற்குரிய காலத்தில் உதவியாகும், அதனால் - ஆதலால், இறுகாலத்து என்ன பரிவு - ஊழ் வினையால் கெடுங்காலத்தில் வருந்துவது ஏன் ? (க-து.) ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாதிருத்தல் வேண்டும். (வி-ம்.) ‘ஊன்றாகா ' என்பது ஊற்றாகா என நின்றது. ஊன்று - ஈண்டு ஊன்றுகோல் : ஊன்றுகோல் போல் உதவியாகா என்பது கருத்து. எவ்வளவு துன்புற்றாலும் வினை உருத்து வருத்துமேயல்லது அவ்வுற்ற நேரத்தில் உதவிசெய்யா தென்றற்கு அங்ஙனம் கூறப்பட்டது. உதவி செய்தற்குரிய நல்வினையாயின் உதவும் என்றற்கு ‘ஆமிடத்தே ஆகும்' எனப்பட்டது; சிறுகாலை யென்றது பிறவித்தொடக்கத்தை; ஈண்டுக் கருவியின் நிலையை உணர்த்திற்று. பொறியும் என்னும் உம்மை எதிரது தழீஇயதாய்ப் பின்னர்ச் செய்யும் ‘வினைகளும் அத்தகையனவே என்பதைப் புலப்படுத்தி நின்றது, என்னை' யெனப்பட்டது. பயனில்லை யென்றற்கு, பரிவு என்றார், பெற்ற காலத்துற்ற அன்பினால் வருந்துதலின். இக்கருத்து, சிந்தாமணியில் ‘நோதலும் பரிவுமெல்லாம்' 1 என விதந்துரைக்கப்பட்டது. (10)
1. சிந். 1 : 240.
|