சினம் இன்மை
 
அறத்துப்பால்
7. சினமின்மை
63காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாத தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.

(பொ-ள்.) காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லியே சினச்சொல், ஓவாது தனனைச் சுடுதலால் - என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் - இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தையுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து - மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள்.

(க-து.) சினப்பது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார்.

(வி-ம்.) உள்ளடங்காது வெளிவருதல் தோன்ற ‘வாய் திறந்து ' எனப்பட்டது. ஏகாரங்கள் இரண்டனுள் முன்னது தேற்றம் ; மற்றது அசை . வருத்துதலின் மிகுதி தோன்றச் ‘சுடும்' என்றார் ‘ஆய்ந்தமைந்த ' என்பது கேள்விக்கு அடைமொழி. ஓவாதே உடையார் எனக் கொள்க. ஆய்தல் - நூலான் வந்த அறிவைத் தம் பழக்கத்தால் உணர்ந்து முடிவு செய்தல். அமைதல் - அம் முடிவின் வழிப் பண்படுதல். ‘காய்ந்தமைந்த' என்னுமிடத்துக் ‘காய்ந்து ' காரணப்பொருட்டும், ‘அமைந்த' அமைந்த சொற்கள் என்னும் பொருட்டுமாம். ‘கறுத்தல்' : உரிச் சொல் அடியாகப் பிறந்த சொல்.1 சினமில்லாமலித்ததற்குப் பண்பட்ட கேள்வி ஞானம் இன்றியமையாததென்னும் உண்மையும் இச்செய்யுட்கண் அறிவுறுத்தப்பட்டமை கண்டு கொள்க.

(3)


1. தொல். உரி . 74.