நான்மணிக்கடிகை
(விளம்பி நாகனார்)
கடவுள் வாழ்த்து
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும், நிறம்.
உரை
   
படியை மடியகத்து இட்டான்; அடியினான்
முக் கால் கடந்தான் முழு நிலம்; அக் காலத்து
ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்;-சோவின்
அருமை அழித்த மகன்.
உரை