1.
நூல்
எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்லவற்றை விரைந்து!
உரை
   
2. பறை பட வாழா, அசுணமா; உள்ளம்
குறை பட வாழார், உரவோர்; நிறை வனத்து
நெல் பட்டகண்ணே வெதிர் சாம்; தனக்கு ஒவ்வாச்
சொல் பட்டால், சாவதாம் சால்பு.
உரை
   
3. மண்ணி அறிப, மணி நலம்; பண் அமைத்து
ஏறியபின் அறிப, மா நலம்; மாசு அறச்
சுட்டு அறிப, பொன்னின் நலம் காண்பார்; கெட்டு அறிப,
கேளிரான் ஆய பயன்.
உரை
   
4. கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று
ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள்
பல் விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார்,
நல் ஆள் பிறக்கும் குடி?
உரை
   
5. கல்லில் பிறக்கும், கதிர் மணி; காதலி
சொல்லில் பிறக்கும், உயர் மதம்; மெல்லென்
அருளில் பிறக்கும், அற நெறி; எல்லாம்
பொருளில் பிறந்துவிடும்.
உரை
   
6. திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய
அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக்
கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும்,
போற்றாதார் முன்னர்ச் செலவு.
உரை
   
7. ‘கள்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ‘ஒண் பொருள்
செய்வம்!’ என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள்
காப்பார்க்கும் இல்லை, துயில்.
உரை
   
8. கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று
உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம்
வெகுண்டார்முன் தோன்றா கெடும்.
உரை
   
9. நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்;
குளத்துக்கு அணி என்ப, தாமரை; பெண்மை
நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி
தான் செல் உலகத்து அறம்.
உரை
   
10. கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர,
மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி,
இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை
நயத்தின் பிணித்துவிடல்!
உரை