21. மொய சிதைக்கும், ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய் சிதைக்கும், பொன் போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்,
கூடார்கண் கூடிவிடின்.
உரை
   
22. புகழ் செய்யும், பொய்யா விளக்கம்; இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை; காணாக்
குருடராச் செய்வது மம்மர்; இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு.
உரை
   
23. மலைப்பினும், வாரணம் தாங்கும்; குழவி,
அலைப்பினும், ‘அன்னே!’ என்று ஓடும்; சிலைப்பினும்,
நட்டார் நடுங்கும் வினை செய்யார்; ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல்.
உரை
   
24. நகை நலம் நட்டார்கண் நந்தும்; சிறந்த
அவை நலம் அன்பின் விளங்கும்; விசை மாண்ட
தேர் நலம் பாகனால் பாடு எய்தும்; ஊர் நலம்
உள்ளானால் உள்ளப்படும்.
உரை
   
25. அஞ்சாமை அஞ்சுக! ஒன்றின், தனக்கு ஒத்த
எஞ்சாமை, எஞ்சும் அளவு எல்லாம்! நெஞ்சு அறியக்
கோடாமை, கோடி பொருள் பெறினும்! நாடாமை
நட்டார்கண் விட்ட வினை!
உரை
   
26. அலைப்பான், பிறிது உயிரை ஆக்கலும் குற்றம்;
விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்;
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;
கொலைப்பாலும் குற்றமே ஆம்.
உரை
   
27. கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்
பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்
துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்
விளி நோக்கி இன்புறூஉம், கூற்று.
உரை
   
28. கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,
புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,
தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே
இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்
உயர்ந்த உலகம் புகும்.
உரை
   
29. குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்
பழித்துழி நிற்பது பாவம்; அழித்துச்
செறுவுழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு.
உரை
   
30. திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;
கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லை; ‘இலம்!’ என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
உரை