41. வெள்ளம் வருங்காலை ஈர்ப்படுக்கும்; அஃதேபோல்,
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;-
ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம்.
உரை
   
42. விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;-
அளிந்தார்கணாயினும், ஆராயான் ஆகித்
தெளிந்தான் விரைந்து கெடும்.
உரை
   
43. மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
கறங்கு நீர் கல் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
இறந்தது பேர்த்து அறிவார் இல்.
உரை
   
44. கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக,
பொய்யாகத் தம்மைப் பொருள் அல்ல கூறுபவேல்,-
மை ஆர உண்ட கண் மாண் இழாய்!-என் பரிப,
செய்யாத எய்தாஎனின்?
உரை
   
45. நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்கலாற்றாதார்,
நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,-
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ,
தீ இல்லை ஊட்டும் திறம்?
உரை
   
46. முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலாதாரை,
‘அகம் புகுதும்!’ என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார்
ஒக்கலை வேண்டி அழல்.
உரை
   
47. ஆயிரவரானும் அறிவிலார் தொக்கக்கால்,
மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்;-
பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
காய்கலாவாகும் நிலா.
உரை
   
48. நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,-
மரையா கன்று ஊட்டும் மலை நாட!-மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு.
உரை
   
49. வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலான், ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண்.
உரை
   
50. கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார்,
மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லரால்;
பொற்ப உரைப்பான் புக வேண்டா,-கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல்.
உரை