51. இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னே
அயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால்
கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவே
சிறு குரங்கின் கையால் துழா.
உரை
   
52. பாரதத்துள்ளும், பணையம் தம் தாயமா,
ஈர்-ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடு
ஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால்,
காதலரொடு ஆடார் கவறு.
உரை
   
53. அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்று அவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார், நல்ல
வினை மரபின், மற்று அதனை நீக்குமதுவே
மனை மரம் ஆய மருந்து.
உரை
   
54. தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு
உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே;
கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ,
முள்ளினால் முள் களையும் ஆறு.
உரை
   
55. ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடு
வேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால்,
ஆற்று உணா வேண்டுவது இல்.
உரை
   
56. ‘எமக்குத் துணையாவார் யாவர்?’ என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம்.
உரை
   
57. ‘கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்’ என்பார்
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;-
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!-
கடம் பெற்றான் பெற்றான் குடம்.
உரை
   
58. நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்
பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;-
மரம் பயில் சோலை மலை நாட!-என்றும்
குரங்கினுள் நன் முகத்த இல்.
உரை
   
59. முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்,
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;-
கட்டு அலர் தார் மார்ப!-கலி ஊழிக் காலத்து,
கெட்டார்க்கு நட்டாரோ இல்!
உரை
   
60. ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே?-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை; மற்று இல்லை,
மரம் போக்கிக் கூலி கொண்டார்.
உரை