61. ‘உணற்கு இனிய இந் நீர் பிறிதுழி இல்’ என்னும்
கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலின், கேட்டலே நன்று.
உரை
   
62. கழுமலத்து யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால், விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டா விடுதல் அரிது.
உரை
   
63. எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர!- குறும்பு, இயங்கும்
கோப் புக்குழி, செய்வது இல்.
உரை
   
64. கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர்
பொல்லாதது இல்லை; ஒருவற்கு-நல்லாய்!-
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு.
உரை
   
65. வென்று அடுகிற்பாரை வேர்ப்பித்து, அவர் காய்வது
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்-
குன்றொடு தேன் கலாம் வெற்ப!-அது பெரிதும்
நன்றொடு வந்தது ஒன்று அன்று.
உரை
   
66. முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால்,
பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்;
பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!-
துன்னினார் அல்லர், பிறர்.
உரை
   
67. சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும்,
சீர்ந்தது செய்யாதார் இல்.
உரை
   
68. எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின்,
தினைத் துணையேயானும் அணிக் கொண்டல் நன்றே;-
இனக் கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப!-
பனைப் பதித்து, உண்ணார் பழம்.
உரை
   
69. தம் தம் பொருளும், தமர்தம் வளமையும்,
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!-
அம் தண் அருவி மலை நாட!-சேண் நோக்கி,
நந்து, நீர் கொண்டதே போன்று!
உரை
   
70. சிறியவர் எய்திய செல்வத்தின், மாண்ட
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-
மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்
முது நெய் தீது ஆகலோ இல்.
உரை