191. ‘பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை
இன்று ஒறுக்கின்றது’ என நினையார், துன்புறுக்கும்
மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!-
ஏவலாள் ஊரும் சுடும்.
உரை
   
192. கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார்
சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் எற்று எனின்,-
தானும் நடவான் முடவன், பிடிப்பூணி,
யானையொடு ஆடல் உறவு.
உரை
   
193. தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை, ஏய்ப்பார், முன்
சொல்லொடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே-
வில்லொடு காக்கையே போன்று.
உரை
   
194. நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு,
நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;-
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப!-கெடுமே,
கொடும்பாடு உடையான் குடி.
உரை
   
195. நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால்,
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே;-
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்,
ஓர்த்தது இசைக்கும், பறை.
உரை
   
196. புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால்; உரை பிறிது
கொண்டு எடுத்துக் கூறல்,-கொடுங் கழித் தண் சேர்ப்ப!-
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று.
உரை
   
197. பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம்,
முட்டு உடைத்தாகி, இடை வீழ்ந்து ஒழிதலின்,-
நட்டு அறான் ஆதலே நன்று.
உரை
   
198. ‘இறப்ப எமக்கு ஈது இளிவரவு!’ என்னார்,
பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே-
தால அடைக்கலமே போன்று.
உரை
   
199. தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப் பொருள்
தொக்க வகையும் முதலும் அது ஆனால்,
‘மிக்க வகையால் அறம் செய்!’ என, வெகுடல்,-
அக்காரம் பால் செருக்குமாறு.
உரை
   
200. உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை,
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்-குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்துவிடல்.
உரை